உல்லாச யாத்திரை அல்ல

மசூர்ஹி கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு முப்பதாயிரம் மக்களுக்குமேல் வந்திருந்தனர். தமது பீகார் யாத்திரை உல்லாத யாத்திரை அல்ல என்றும், மனக்கலக்கத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சிகளே தமது யாத்திதைக்குக் காரணம் என்றும் அப்போது காந்திஜி கூறினார். முஸ்லிம்கள் துன்பத்திற்கு உள்ளான இடங்களுக்குத் தாம் விஜயம் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டார். தகுந்த, கண்ணியமான நடவடிக்கைகளின் மூலம் ஹிந்துக்கள் தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். காந்திஜி மேலும பேசியதாவது:

சென்ற நவம்பர் மாதம் வெறிபிடித்த மக்கள், பெண்களையும் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்தார்கள். நோவாகாலி நிகழ்ச்சிகளை அற்பமாகச் செய்யுமாறு ஆடவர்களும் அடித்துக் கொல்லப்பட்டார்கள். நோவாகாலியிலும் கோரமான சம்பவங்கள் நிகழத்தான் செய்தன. பீகார் ஹிந்துக்கள் தாங்கள் செய்த தவறுகளுக்கு உண்மையாகவே வருந்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் 'காந்திக்கு ஜே' என்று உரக்கக் கத்துவது மாத்திரம் போதாது. கஷ்ட நிவாரண நிதிக்கு அவர்கள் தாராளமாகப் பண உதவி செய்வது மாத்திரம் போதாது. அவர்கள் செய்த தவறுகளை என்னிடமாவது ஒப்புக்கொள்ள முன்வரவேண்டுமென்று நான் எதிர்ப்ர்க்கிறேன். இவ்விதம் செய்தால்தான் எனக்கு உண்மையான மன அமைதி ஏற்படும்.

பலவிடங்களிலிருந்தும் செய்திகளை அனுப்பும்படி நான் கேட்டிருக்கிறேன். முதன்முதலில் முஸ்லிம்கள்தான் தாக்குதலில் இறங்கினார்கள் என்று அச்செய்திகளில் ஒன்று கூறுகிறது. கலவரம் உண்மையில் எப்படி ஆரம்பமாயிற்று என்பதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. இங்கே ஹிந்துக்கள் மிகப் பெரும்பான்மையோராக உள்ளனர். அப்படியிருக்க, அவர்கள் நிரபராதிகளைக் கொலை செய்யும் இழிவான நிலைக்கு எப்படித் தங்களைத் தாழ்த்திக்கொண்டார்கள் என்பதே பிராச்னையாகும். உண்மையான மனவருத்தமும், அதைத் தொடர்ந்து கஷ்ட நஷ்டங்களுக்கு ஈடுசெய்யும் நடவடிக்கைகளுமே, இரு சதோதர சமூகங்களிடையே நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

முஸ்லிம்களால் கஷ்டத்திற்கு உள்ளான ஹிந்துக்கள் விஷயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்றும் ஒரு செய்தி அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுகிறது. முஸ்லிம்களின் புகார்களை அரசாங்கம் சட்டை செய்யவில்லை என்று முஸ்லிம் வட்டாரங்களிலிருந்து வந்த செய்திகள் கூறுகின்றன. இரு செய்திகளையும் நம்ப நான் தயங்குகிறேன். சமூக நலன்களில் அக்கறை காட்டாத அல்லது பாரபட்சத்துடன் நடக்கும் அரசாங்கம், அதிக காலத்திற்கு வாழ முடியாது. தாங்கள் சீக்கிரத்தில் எல்லாப் புகார்களையும் விசாரிக்கவும், பயங்கரமான கலவரங்களுக்குக் காரணங்களைப் பரிசீலனை செய்யவும், அத்தகைய கோர நிகழ்ச்சிகள் இனி நடைபெறாமல் இருப்பதற்கான வழிவகைகளைக் கண்டு பிடிக்கவும், பாரபட்சமற்ற ஒரு ஆணையத்தை நியமிக்கப் போவதாக அரசாங்கம் முன்னரே பிரகடனம் செய்திருக்கிறது. துன்பத்திற்கு உள்ளானவர்களுக்குச் செய்ய வேண்டிய நஷ்ட ஈடு பற்றியும் அக்கமிஷன் ஆலோசனை கூறும். எனவே, எனக்குக் கடிதம் எழுதியிருப்பவர்கள், கமிஷன் முன்னிலையில் சாட்சியம் கொடுப்பதற்குத் தயாராக இருப்பார்களாக. சீதிபதியாகவோ அல்லது அரசாங்க வக்கீலாகவோ இருப்பது என் வழியல்ல. எனது தாழ்மையான வழி, சீர்திருத்த வாதியாகவும் ஜீவகாருண்யத்துடனும் நடப்பதேயாகும். எனவே, செய்வதும், தங்களுடைய மதியீனமான நடவடிக்கைகளைக் குறித்து வருந்தும்படி குற்றம் செய்தவர்களை அழைப்பதுமேயாகும்.

என் இடைவிடாப் பிரார்த்தனை

காந்திஜி, மசூர்ஹியில் தாம் கண்ட கோரக் காட்சியைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டுக் கூறியதாவது:

மசூர்ஹியில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி நான் முஸ்லிம் லீக் செய்தியைப் பார்த்தேன். அதை, மிகைபடக் கூறியிருப்பதாவே முதலில் நினைத்தேன். ஆனால், மசூர்ஹிக்கு நான் நேரில் சென்று பார்த்தபோது, அச் செய்திகளில் கண்ட விவரங்கள் எல்லாம் உண்மையானவை என்பது தெரிந்தது. நோவாகாலி தினத்தைக் கொண்டாடியதால் ஏற்பட்ட பரபரப்பே அங்கே நடந்த கோர நிகழ்ச்சிகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 23ஆம் தேதி பஞ்சாப் தினத்தை அனுசரிக்கப் போவதாகப் பேச்சு இருந்து வருகிறது. அதனால் பீகார் முஸ்லிம்கள் கலக்கம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அது உண்மையில் ஆதாரமற்ற ஒரு வதந்தி என்றே நம்புகிறேன். அவ்வித தினத்தை அனுசரிப்பது, சகோதரர்களிடையே பரஸ்பரம் படுகொலை செய்யும்படி அழைப்பதற்கு ஒப்பாகும். பீகாரில் அத்தகைய துரதிருஷ்டமான சம்பவம் நிகழுமாயின், நான் அந்த ஜ்வாலையில் அழிந்துவிடவே விரும்புவேன் என்று முஸ்லிம் நண்பர்களிடம் நான் கூறியுள்ளேன். அத்தகைய பயங்கரமான, வெட்கக்கேடான காட்சியைக் காண என்னைக் கடவுள் உயிருடன் வைத்திருக்கக் கூடாது என்பதே எனது இடைவிடாத பிரார்த்தனையாகும்.

செயின், பார்னி என்ற இரு கிராமங்களிலிருந்து எனக்கு இரண்டு கடிதங்கள் வந்திருக்கின்றன. அங்கேயுள்ள ஹிந்து, முஸ்லிம் கிராமவாசிகளிடையே நட்புணர்சச் நிலவுவதாக அக்கடிதங்களில் வருணிக்கப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் அத்தகைய நட்புணர்சச்சி நிலவவேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

ஹரிஜன் - 06.04.1947

 

Website Designed by Gandhi Iyakkam, Thanjavur